Friday, January 28, 2011

நாய்ப்பிழைப்பு

ஓடும் ரயிலை
ஓடிப் பிடித்ததில்
வசதியாய் கிடைத்து ஓர் இருக்கை.

என் அருகே, தினசரியை புரட்டியபடி
உலகப் பொருளாதாரம் முதல்
உள்ளூர் விவகாரம் வரை
அனைத்தையும் அலசிக்கொண்டிருந்தார்
என் அலுவலக நண்பரொருவர்.

"தெரியுமா?
நடனக் கலைஞரின் கையுறை ஒன்று
நாலு கோடிக்கு ஏலம் போனதாம்!
.....
.....
இங்க பாரு கொடுமைய..,
சாப்பாட்டுக்கு வழியில்லாம‌
தந்தையும்,மகளும் பட்டினிச் சாவாம்"

இரண்டையும்
எந்த வேறுபாடுமில்லாமல்
சொன்னவரிடம்,

"தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்.."
அவசர, அவசரமாய் ஞாபகத்திற்கு வந்த‌
பாரதியின் வரியை அடக்கிக் கொண்டு
அவரிடம் கேட்டேன்..,

"சார், அஞ்சு நிமிஷம் ஆபிசுக்கு லேட்டாயிட்டா
ஹாப்ப டே லீவா ஆக்கிடமாட்டாங்களே"


" கடந்த வாரம் அல்லது 15 நாள்கள் இருக்கலாம், தினசரி ஒன்றில் நான் படிக்க நேர்ந்த செய்தி தான் அது "தந்தையும், மகளும் பட்டினியால் இறந்தனர்" என்பது. ஒருவேளைப் பசியே நம்மை பாடாய்படுத்தும் போது, 'பசியால் மரணம்' என்னை அதிர்ச்சியுறச் செய்தது.வேறேதும் செய்ய இயலாத நான், அதையே சற்று கற்பனைக் கலந்து கவிதையாக்க முயன்றுள்ளேன். ."

No comments: