Friday, October 5, 2012

உறங்கா இரவுகள்!

நீ உறங்கா இரவுகளில்
உன்னை என் தோள்சாய்த்து
உனக்கு படித்துக் காட்டவே,

உன் நினைவுகளால்
நீண்ட என் இரவுகளில்
எழுதிவைக்கின்றேன்,

ஒவ்வொரு நட்சத்திரத்திலும்
உனக்கான என் கதைகளை..!

கனவுகளில் உன்னோடு
பேசியவைகளையே
கவிதைகளாக்கி வைத்திருக்கிறேன்
நான் உறங்கிய இரவுகளில்..!

இப்பொழுது புரிகிறதா,
எண்ணிக்கையில்
என் கவிதைகளைவிட‌
நட்சத்திரங்கள்
அதிகமாய் இருப்பதன் காரணம்..?

தங்கை நிலா!

ஞாபகமிருக்கின்றதா?

மழை ஓய்ந்த மாலை வேளையில்
சாலையோரமாய் சென்றுகொண்டிருந்தோம்.

சட்டென்று நான் நிற்கவும்,
"என்ன ணா?" என்றாய்,

சாரல் ஒரு ரகசியம் சொல்லியது என்றேன்!
"என்ன ணா அது?" என்றாய்,

சற்று முன்
நீ உலுக்கிய மரக்கிளையில் இருந்துமட்டும்
'பன்னீர் துளிகள் கொட்டியதாம்' என்றேன்.

அன்று முதல்தான் நீ என் கவிதைகளின்
முதல் ரசிகை ஆனாய்!!

தங்கை நிலா! -2

க‌ண்ணீர் துளிக‌ளால்
மை நிரப்பி எழுதும் என் பேனா
உன்னைப் ப‌ற்றி
எழுதும் போது ம‌ட்டும்
பூக்க‌ளின் சாற்றை
நிர‌ப்பிக் கொள்வ‌து எப்ப‌டி..?
என்ப‌து புரியாம‌லே எழுத‌த்தொட‌ங்குகிறேன்.

சிறுவ‌ய‌தில் நீ
சில்லாக்கு விளையாடிவிட்டு
வீசியெறிந்த‌ வ‌ட்ட‌க்க‌ல்தான்
நிலா ஆன‌து என்ப‌தும்

நீ ப‌ல்லாங்குழி
விளையாடுவ‌த‌ற்கு காய்க‌ளாக‌
நான் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளை
ப‌றித்துக்கொடுத்த‌தும்

நீயும் நானும் ம‌ட்டும்
அறிந்த‌ ர‌க‌சிய‌ங்க‌ள் !

தேவ‌தைக‌ளின் ச‌ங்கீத‌மாய்
உன் சிரிப்பொலியும்
தேர்க‌ளின் ஊர்வ‌ல‌மாய்
உன் கொலுசொலியும்
எங்களை சுற்றி சுற்றி வ‌ந்த‌து.

எங்களது வாழ்வில்
வண்ணத்துப்பூச்சியாய்
வசந்தக்காலத்தில் மட்டுமல்ல‌
எந்தக் காலத்திலும் நீ இருந்தாய்!

ப‌டிப்பு முடிந்து,பிழைப்பை தேடி
உன்னை விட்டு, ஊரைவிட்டு
ப‌ட்டண‌த்தில் நான் வாழ்ந்த‌போது

உயிர‌ற்ற‌ ப‌ண்டிகை நாட்க‌ள்
உயிர்பெறுவ‌து ‍ நான்
உன்னோடு தொலைபேசியில்
உரையாடும் ஒரு சில‌ நிமிட‌ங்க‌ள் ம‌ட்டுமே!!

பின்னொரு நாளில்
காத‌லில் தோல்வியுற்று நான்
க‌ண்ணீரில் க‌ரைந்துகொண்டிருந்த‌ போது
உன் க‌வ‌ன‌மான‌ வார்த்தைக‌ள் தான்
என் கண்ணீர்த்துளிகளை
கவிதை முத்துக்களாக்கியது.

அதுவ‌ரை
அறியாப் பெண்ணாய்
ஆசை த‌ங்கையாய் ம‌ட்டுமிருந்த‌ நீ
அன்றுமுதல் என் தோழியுமானாய்!

இன்று ம‌ண‌முடித்து
ம‌றுவீடு செல்லுகையில்
திரண்டிருந்த என் கண்ணீரை
க‌ண்டுவிட்ட‌ நீ
மெல்ல உன் கண்ணீரை
மறைத்துவிட்டு
என் விழி துடைத்து,
த‌லைகோதிய‌ அந்த‌ நொடி
நீ என் தாயுமானாய் என்பதை
உன‌க்கு எப்ப‌டி சொல்வ‌து என்று
புரியாமல் முடிக்கின்றேன்
இக்கவிதையை...!

கண்ணீரின் அடர்த்தி!

மாநகராட்சி பேருந்து நிறுத்தம்.

"ஸ்ஸ்..கூல்ல புள்ளய‌
வெளியே அனுப்பிட்டாங்க‌
யூனிபாம் வாங்கணும்
கொஞ்சம் உதவி பண்ணுங்க தம்பி...."
என்று கேட்டபடி
என்னருகில் வந்து நின்ற
வயதான பாட்டியின் குரலும்
அருகில் நின்றிருந்த
சிறு தேவதையின் முகமும்,
பரிதாப‌ அலைகளை
என்னுள் அரங்கேற்ற‌த் தொடங்கின.

பல முறை அறியப்பட்டவைதான்
இது போன்ற வார்த்தைகள்
என்றாலும் ‍‍‍ இந்த முறை
வார்த்தையில் வழிந்தோடிய உண்மை
சற்று தடுமாறச் செய்த போதும்,
இல்லாத இமை கொண்டு
மனதை மூடச்செய்தது
மாசக் கடைசி!

உதவ முடியாத குற்ற உணர்ச்சி
உந்தித் தள்ள
வந்து நின்ற பேருந்தில்
அடித்து பிடித்து உள் நுழைந்தேன்!

நெரிசலின் வழி
நிறுத்தத்தில் இறங்கி
நடக்கத் தொடங்கியபோ....,
சட்டென்று அதிர்ந்தேன்.
எனது மிச்ச சொச்சப் பணமும்
களவாடப்பட்டிருந்தது..!

என்னில் வழியத்தொடங்கிய‌
கண்ணீர்
பணம் பறிகொடுத்ததற்காக‌
மட்டும் அல்ல என்பதை
உணரச் செய்தது
அதன் அடர்த்தி!

நிழலும்,நன்னீரும்!

முன்பெல்லாம்..,
கோபப்பார்வை ஒன்று போதும்
நான் கொழுந்துவிட்டு எரிய!
இன்றோ
ஆசை ஆசையாய்
அள்ளிச் சேர்க்கிறேன் உன்
அனல் வார்த்தைகளை!!

என் நினைவு அல‌மாரியில்
ர‌சித்துக் கொண்டே
சேக‌ரிக்க‌த் தொட‌ங்கிவிட்டேன்
உன் கோப‌த் த‌ருண‌ங்க‌ளை,
த‌டுக்கிவிழுந்துவிட்ட த‌ரையை
த‌ன் கையால்
அடித்து அழும் குழ‌ந்தையை
ஆசையோடு அணைத்துக்கொள்ளும்
ஓர் அன்னையைப் போல‌!!

உன்னிட‌மிருந்தே க‌ற்றுக்கொண்டேன்,
காய‌ப்ப‌டுத்தும் வார்த்தைக‌ள்கூட‌
க‌டின‌மாய் இல்லை
என் தாய்மொழியில் என்ப‌தையும்!!

நிழ‌லும், ந‌ன்னீரும் தான்
இனிமை என்றால்,
வெயிலையும், வெந்நீரையும்
என்ன‌வென்று சொல்வது
.
.
குளிர்கால‌த்தில்!?!

காதல் என்பது!

காதலர் தினத்தில்
ஒரு காதல் கவிதையாவது
எழுதாவிட்டால்
எப்படி...?

அவசரமாய் காகிதம் எடுத்து
அழகாய் எழுதத் தொடங்கினேன்,

" காதல் என்பது....
......ம்ம்...."
வார்த்தை ஒன்றும் சிக்கவில்லை.

பக்கத்து அறை
தொலைக்காட்சி
கவனத்தை கலைத்தது.

அதில் அடுக்கடுக்காய்
அரங்கேற்றப்பட்டன‌
இளைஞர், இளைஞிகளின்
அனல் பறக்கும் விவாதங்கள்.

சற்று நேரத்திலெல்லாம்
தொலைக்காட்சியை
அணைத்துவிட்டு
மீண்டும் வந்த‌மர்ந்தேன்
கவிதை எழுத.

"காதலை
முதலில் சொல்வது யார்?
முதலில் பிரிவது யார்?

......."
நீல நிற உடையணிந்த பெண்ணின் குரல்
கவனத்தில் வந்து போனது.

ம்.. கவனம், கவனம்
கவனத்தை குவி.

" காதல் என்பது..."

"காதலர் தினம்
நம் கலாசாரமா?

உயரமாய் வளர்ந்திருந்தவனின்
கணீர் குரல்
காதுகளையே
சுற்றி, சுற்றி வந்தது.

ம்ஹூம்.. நமக்கு கவிதை வேண்டும்.
கவனத்தை திருப்பு.

சரி..சரி,
"காதல் என்பது..."

" அதிகமாய்
காதலில் வீழ்ந்தவர் யார்?
வீழ்ந்து மீண்டவர் யார்? ‍

வஞ்சித்தோர் யார்?
வஞ்சிக்கப்பட்டோர் யார்? "

விவாதித்தோரின்
கேள்வி அலைகள்
ஓடிக்கொண்டேயிருந்தன மனத்திரையில்

என்ன தான் வேண்டும் இவர்களுக்கு..
எதைத்தான் எழுதுவது நான்.
பேனாவை மூடி வைத்துவிட்டு
வெளியேறினேன்.

அங்கே
பக்கத்து அறையில்
படுக்கையில் வீழ்ந்திருந்த‌
தாத்தாவின் வாய் ஒழுகலை
துடைத்துவிட்டு
வேறு சட்டையை மாற்றிவிட்டு
வந்த பாட்டி என்னை கண்டதும்
"அவர் எப்பவும்
தன்னை சுத்தமாய்
வைத்துக் கொள்வார்.
எச்சி ஒழுகினால் அவருக்கு பிடிக்காது. அதான்" என்றாள்.

சொல்லிக்கொண்டிருக்கும் போது
பாட்டியின் கலங்கிய கண்களில்
வழிந்து கொண்டிருந்த லேசான பெருமிதம்
மெல்ல எழுதத் தொடங்கியது
என் கவிதையின் வரிகளை..

"காதல் என்பது
தேடுத‌ல் அல்ல‌
வாழுதல்...!"

Monday, May 21, 2012

வாழையடி வாழை!


(நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு வாழ்த்து மடலாக எழுதியது)

ஒருவரோடு ஒருவராய் வாழுங்கள்
ஒருவருக்கு ஒருவராய் வாழுங்கள் .. ஆனால்
அவரவரின் தனித்தன்மைகளோடு !

வலது, இடது கைகளே கை கோர்த்து
நடக்க அனுமதிக்கும் ஒரே திசையில்.
வலதும்,வலதும் .. இடதும்,இடதும் அல்ல!
வேறுபாடுகளை அனுமதியுங்கள்
மன வேறுபாடு ஏதுமில்லாமல்!

மாலைச் சூரியன் அள்ளி வீசும்
மஞ்சள் ஒளியே _ மகரந்தத் தூளாய்
காலைத் தாமரைக்குள் மறைந்திருப்பது போல‌
ஒருவர் மனதை ஒருவர் அறிந்தேயிருங்கள்
மறைவாக மனதிற்குள்!

தாகங்கொண்ட மானிரண்டு
நீர் அருந்தியும் தீர்ந்து போகாத நீர்க்குட்டை
கதை போன்று _ விட்டுக் கொடுங்கள்
உங்கள் விருப்பங்கள் நிறைவேறாத போதும்!

அது சரி, இந்த கவிதைத் தாள்
காணாமல் போய்விட்டால்..?
கவலையை விடுங்கள்,
காதலோடு வாழுங்கள் காலம், காலமாய்...


[குறிப்பு : வலது, இடது கைகள் பற்றிய வரிகள் குறுஞ்செய்தியில் படித்தேன். இந்த வரிகளுக்குப் பொருத்தமாய் இருந்ததால் இங்கு பயன்படுத்திக் கொண்டேன்.)

( நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு வாழ்த்து மடலாக எழுதியது)