Friday, October 5, 2012

காதல் என்பது!

காதலர் தினத்தில்
ஒரு காதல் கவிதையாவது
எழுதாவிட்டால்
எப்படி...?

அவசரமாய் காகிதம் எடுத்து
அழகாய் எழுதத் தொடங்கினேன்,

" காதல் என்பது....
......ம்ம்...."
வார்த்தை ஒன்றும் சிக்கவில்லை.

பக்கத்து அறை
தொலைக்காட்சி
கவனத்தை கலைத்தது.

அதில் அடுக்கடுக்காய்
அரங்கேற்றப்பட்டன‌
இளைஞர், இளைஞிகளின்
அனல் பறக்கும் விவாதங்கள்.

சற்று நேரத்திலெல்லாம்
தொலைக்காட்சியை
அணைத்துவிட்டு
மீண்டும் வந்த‌மர்ந்தேன்
கவிதை எழுத.

"காதலை
முதலில் சொல்வது யார்?
முதலில் பிரிவது யார்?

......."
நீல நிற உடையணிந்த பெண்ணின் குரல்
கவனத்தில் வந்து போனது.

ம்.. கவனம், கவனம்
கவனத்தை குவி.

" காதல் என்பது..."

"காதலர் தினம்
நம் கலாசாரமா?

உயரமாய் வளர்ந்திருந்தவனின்
கணீர் குரல்
காதுகளையே
சுற்றி, சுற்றி வந்தது.

ம்ஹூம்.. நமக்கு கவிதை வேண்டும்.
கவனத்தை திருப்பு.

சரி..சரி,
"காதல் என்பது..."

" அதிகமாய்
காதலில் வீழ்ந்தவர் யார்?
வீழ்ந்து மீண்டவர் யார்? ‍

வஞ்சித்தோர் யார்?
வஞ்சிக்கப்பட்டோர் யார்? "

விவாதித்தோரின்
கேள்வி அலைகள்
ஓடிக்கொண்டேயிருந்தன மனத்திரையில்

என்ன தான் வேண்டும் இவர்களுக்கு..
எதைத்தான் எழுதுவது நான்.
பேனாவை மூடி வைத்துவிட்டு
வெளியேறினேன்.

அங்கே
பக்கத்து அறையில்
படுக்கையில் வீழ்ந்திருந்த‌
தாத்தாவின் வாய் ஒழுகலை
துடைத்துவிட்டு
வேறு சட்டையை மாற்றிவிட்டு
வந்த பாட்டி என்னை கண்டதும்
"அவர் எப்பவும்
தன்னை சுத்தமாய்
வைத்துக் கொள்வார்.
எச்சி ஒழுகினால் அவருக்கு பிடிக்காது. அதான்" என்றாள்.

சொல்லிக்கொண்டிருக்கும் போது
பாட்டியின் கலங்கிய கண்களில்
வழிந்து கொண்டிருந்த லேசான பெருமிதம்
மெல்ல எழுதத் தொடங்கியது
என் கவிதையின் வரிகளை..

"காதல் என்பது
தேடுத‌ல் அல்ல‌
வாழுதல்...!"

No comments: