Tuesday, October 5, 2010

மழைக் காதலி !

அலுவலகம் முடிந்தவுடன்
ஆசையாய் வீடு திரும்பினேன்,
உன்னை பார்ப்பதற்காக!

எனக்கு முன்பே
வந்துவிட்ட நீ,

குடையிருந்தும்
மழையில் நனைந்ததை
என்னிடம் மறைப்பதற்காக
குளித்துவிட்டு
ஈரக் கூந்தலோடு
அமர்ந்திருந்தாய்
ஜன்னலின் முன்பு,
கண்களை மூடியபடி!!

இதென்ன மழையோடு ஓர் கண்ணாமூச்சி?

மழையை பார்க்க வேண்டும்,
கேட்ககூடாதென்றேன்
மூடியிருந்த உன் கண்களை
என் கைகளால் மூடியபடி!

நீ சொன்னாய்,
இல்லை,

"சுழலுகின்ற பூமியின் மீது
மழையின் ஊசிக்கரங்கள்
தொடும்போதெல்லாம்
பூமி தன்னுள் ஒளிந்திருக்கும் மெல்லிசையை
வெளிப்படுத்துகிறது ஒரு
இசைத்தட்டைப் போல"
என்றாய்!

இதை நீ சொல்லி முடித்தவுடன்,
பலத்த கைத்தட்டல் ஓசையோடு
பொழியத் தொடங்கியது மழை
என் மனதிற்குள்ளும்!!


ஊஞ்சல் !

மழை ஓய்ந்த - ஓர்
மார்கழி மாதத்து மாலை நேரம்

மழைப் பாட்டை பாடியபடி,
சுற்றி அமர்ந்து
பனிக்காற்று
குளிர் காய்ந்து கொண்டிருந்த ஒரு
தெரு விளக்கின் கீழ்
நடந்து கொண்டிருந்தோம்!

'ரொம்ப குளிருதுல்ல..' என்றாய்,
இரண்டு கைகளையும்
குறுக்கியபடி.

சட்டென்று கூக்குரல்
ஒன்று கேட்டது..

அது வேறொன்றுமில்லை
இவ்வளவு நேரமாய் - நீ
கைகளை வீசி
நடந்து கொண்டிருந்ததால்,
உன் கையின் நிழலை
ஊஞ்சலாட்டிக் கொண்டிருந்த
என் கைநிழல் - சட்டென்று
உன் கைநிழல் காணாமல் போய்விட்டதால்
எழுப்பிய கூக்குரல்தான் அது
என்று தெரிந்ததும்

அதை சமாதானப்படுத்த - நீ
உன் கை நிழலின் மடியில்
அமரவைத்தாய்
என் கையின் நிழலை!!

நிலவுக் கவிதை !

மணம் மயக்கும்
மல்லிகை பூக்கும் – ஒரு
மாலை நேரத்தில்
பேருந்தின்
ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தேன்
உன்னை நினைத்தபடி!

சிவக்க தொடங்கிய வானம்
தனக்கான கம்பள
விரிப்பென்ற
கர்வத்தோடு
மேகப் படியேறி
வான மேடைக்கு வந்தது நிலா
இரவு சொற்பொழிவாற்ற!

அதன் கர்வம் கண்டு
சிரித்திட்ட என்னிடம்
காரணம் கேட்ட நிலவிடம்
சொன்னேன் உன்னை பற்றி!

அலங்காரம் ஏதுமின்றி
அழகாய் இருந்தும்
அகங்காரம் ஏதுமற்ற
பேரழகு பெண்ணே
உன்னை பற்றி ஓர் ரகசியம்!

உனக்கே தெரியாத ஓர் ரகசியம்!!

உன் வீட்டருகே பூத்திருக்கும்
சிவப்பு ரோஜா – உண்மையில்
விடிந்தவுடன் உன்னை காண
விடிய விடிய விழித்ததனால்
கண் சிவந்துவிட்ட ஓர்
வெள்ளை ரோஜா என்ற ரகசியம்!!

அவ்வளவுதான்,
உன்னை பற்றி
இன்னும் சொல், இன்னும் சொல்
என்றபடி –

என்
பேருந்தின் கூடவே
ஓடி வந்தது நிலா,

முன்பொருமுறை
உன் உள்ளங்கையில் நீ
வைத்திருந்த
மருதாணி போல்
செக்க செவேலென்று
சிவக்கத்தொடங்கிய
சூரியன் வானில் தோன்றும் வரை!!

அறிந்ததும் அறியாததும் !

வெறும் காகிதப் பூக்கள்
என் கவிதைகள்!

உன் உதடுகளால்
உச்சரிக்கப்படும் போது
அவை வாசம் மட்டும் பெறுவதில்லை
சுவாசமும் பெறுகின்றன!!

கூட்டுப் புழுக்களாய் – என்
நோட்டுப் புத்தகத்தில்
உறங்கிக் கிடந்த
வார்த்தைகள் யாவும்
நீ வாசித்து போன பின்
வண்ணத்துப் பூச்சிகளாய்
பறக்கத் தொடங்கின
என் அறை முழுவதும்!!

கால் பட்டதால்
கல்லொன்று
உருப் பெற்ற கதை நானறிவேன்! – உன்
கண் பட்டதால்
சொல்லொன்று
உயிர் பெற்றதை அன்று முதலே அறிந்தேன்!!

கனாக் கண்டேன் !

மலைக் காற்று இறங்கி வந்து
மனம் மயக்கும் - ஓர் மாலை நேரத்தில்

கண்மூடி நான் சென்ற
ஜன்னலோர ரயில்பயணத்தில்
கண்ட கனவொன்று
சொல்கிறேன் கேள்!

வண்டுகள் வடிவமைத்த
வழக்காடு மன்றத்தில்
வகைத்தெரியாமல்
நின்றிருந்தேன் நான்
குற்றவாளிக்கூண்டில்!!

வழக்கென்ன தெரியுமா?

மலர்களில் தேனெடுக்க முடியாமல்
வண்டுகள்,
மயக்கமடைய காரணமாயிருந்தேனாம்!

எப்படி என்கிறாயா?

பூக்களுக்கு
நான் கற்பித்த
புதுமொழியின் இனிமையாலே
வண்டுகள் மயங்கிவிடுகின்றனவாம்!!

அந்த புதுமொழி
எதுவென்று தெரியுமா?

அன்றொரு நாள்
ஓர் பேருந்துப் பயணத்தில்
உன் முன்னிருக்கை
குழந்தையோடு - நீ
பேசிக்கொண்டிருந்த
கொஞ்சல் வார்த்தைகளைத்தான்
புது மொழியாய்
கற்பித்தேன் நான்
என்ற உண்மை அறிந்த பின்பே
விடுதலை அடைந்தேன்,

அந்த அழகான
கனவிலிருந்தும்!!

அலை ஓசை!

கைகளில் ஒட்டியிருந்த
மணல் துகள்களைத் தட்டியபடி
"நேரமாச்சு, போகலாம் " என்றெழுந்தாய்!

பலத்த சத்தத்தோடு வந்த
அலைக் காற்று ஒன்று - உன்
காதோரக் கூந்தலை கலைத்துச் சென்றது !

"இன்று அலையின் ஓசை
அதிகமாய் உள்ளதே " என்றாய் !

'அது வேறொன்றுமில்லை ‍‍‍
நீ, உன் கை மணலை தட்டியதை
பார்த்துவிட்ட அலை ஒன்று
தன்னை ரசித்து நீ கை தட்டியதாக
எண்ணிக்கொண்ட சந்தோசக்
கூக்குரல்தான் அது என்றேன்!!

"ஆரம்பிச்சுட்டீங்களா ..."என்றபடி
நீ ஆரம்பித்தாய்
உன்கவிதையை ,

அது அப்படி அல்ல ...

" கடலின் மேற்பரப்பில்
காற்று எழுதி அனுப்பும்
கவிதை வரிகளுக்கான
கை தட்டல் தான்
இந்தஅலை ஓசை! " - என்றாய் !!

உடனே ஒரு
செல்ல அலை வந்து
உன் பாத விரல்களை
முத்தமிட்டுச் சென்றது
என் சார்பாக...!!

மனதிற்குள் ஒரு மழைக்காலம் !

தனது அழுகையை
அலட்சியம் செய்திடும்
மக்களின் கவனம் ஈர்க்க
மின்சாரத்தை துண்டித்து விட்டு
ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது மழை!

கையில் மல்லிகையையும்
மன‌தில் மண்வாச‌னையையும்
சுமந்தபடி
வீட்டிற்குள் நுழைந்தேன் !

அள்ளிச் செருகிய சேலையோடு
அடுக்களையில் நின்றிருந்தாய்!
பக்கத்தில் பற்ற‌ வைத்திருந்த
விளக்கின் வெளிச்சத்தை
மேலும் அதிகப்படுத்தியபடி!!

தரையில்
படுக்கவைக்கப்பட்டிருந்த
ந‌ம் குழந்தை - மெல்ல
தவழ்ந்து வந்து
தன் பிஞ்சுக் கைகளை நீட்டி
உன்னருகில் இற‌க்கி வைத்திருந்த
வெந்நீர் பாத்திரத்தில் கையை விடப் போ......

அலறியடித்தபடி கண் விழித்தேன்!

யாருமற்ற என் அறையில்
சுற்றிலும் வெறுமை படர்ந்திருந்தது.
தூரத்தில்
என் கண்ணீர்த் துளிகளில் நனைந்து
கிடந்தது
உன் மணவோலை!!

(கடைசி பத்தியை இப்படியும் மாற்றிப் படிக்கலாம்)


உன்னருகில் இற‌க்கி வைத்திருந்த
வெந்நீர் பாத்திரத்தில் கையை விடப் போ......

அலறிய‌ என் அலாரத்தை நிறுத்திவிட்டு
மெல்ல மணி பார்த்தேன்.
மாலை 5.30!

இன்று எப்படியாவது
அவளிடம் சொல்லிவிட வேண்டும்
என் காதலை
எந்த பதற்றமுமின்றி!

மனதுக்குள் சொல்லிக்கொண்டு
அவசரமாய் கிள‌ம்பினேன்
அவள் கன்னங்களையொத்த‌
ஓர் ரோஜாவை ஏந்திக்கொண்டு!!