Monday, May 21, 2012

வாழையடி வாழை!


(நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு வாழ்த்து மடலாக எழுதியது)

ஒருவரோடு ஒருவராய் வாழுங்கள்
ஒருவருக்கு ஒருவராய் வாழுங்கள் .. ஆனால்
அவரவரின் தனித்தன்மைகளோடு !

வலது, இடது கைகளே கை கோர்த்து
நடக்க அனுமதிக்கும் ஒரே திசையில்.
வலதும்,வலதும் .. இடதும்,இடதும் அல்ல!
வேறுபாடுகளை அனுமதியுங்கள்
மன வேறுபாடு ஏதுமில்லாமல்!

மாலைச் சூரியன் அள்ளி வீசும்
மஞ்சள் ஒளியே _ மகரந்தத் தூளாய்
காலைத் தாமரைக்குள் மறைந்திருப்பது போல‌
ஒருவர் மனதை ஒருவர் அறிந்தேயிருங்கள்
மறைவாக மனதிற்குள்!

தாகங்கொண்ட மானிரண்டு
நீர் அருந்தியும் தீர்ந்து போகாத நீர்க்குட்டை
கதை போன்று _ விட்டுக் கொடுங்கள்
உங்கள் விருப்பங்கள் நிறைவேறாத போதும்!

அது சரி, இந்த கவிதைத் தாள்
காணாமல் போய்விட்டால்..?
கவலையை விடுங்கள்,
காதலோடு வாழுங்கள் காலம், காலமாய்...


[குறிப்பு : வலது, இடது கைகள் பற்றிய வரிகள் குறுஞ்செய்தியில் படித்தேன். இந்த வரிகளுக்குப் பொருத்தமாய் இருந்ததால் இங்கு பயன்படுத்திக் கொண்டேன்.)

( நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு வாழ்த்து மடலாக எழுதியது)

Friday, January 28, 2011

மனதிற்குள் ஒரு மழைக் காலம் !

தனது அழுகையை
அலட்சியம் செய்திடும்
மக்களின் கவனம் ஈர்க்க
மின்சாரத்தை துண்டித்து விட்டு
ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது மழை!

கையில் மல்லிகையையும்
மன‌தில் மண்வாச‌னையையும்
சுமந்தபடி
வீட்டிற்குள் நுழைந்தேன் !

அள்ளிச் செருகிய சேலையோடு
அடுக்களையில் நின்றிருந்தாய்!
பக்கத்தில் பற்ற‌ வைத்திருந்த
விளக்கின் வெளிச்சத்தை
மேலும் அதிகப்படுத்தியபடி!!

தரையில்
படுக்கவைக்கப்பட்டிருந்த
ந‌ம் குழந்தை - மெல்ல
தவழ்ந்து வந்து
தன் பிஞ்சுக் கைகளை நீட்டி
உன்னருகில் இற‌க்கி வைத்திருந்த
வெந்நீர் பாத்திரத்தில் கையை விடப் போ......

அலறியடித்தபடி கண் விழித்தேன்!

யாருமற்ற என் அறையில்
சுற்றிலும் வெறுமை படர்ந்திருந்தது.
தூரத்தில்
என் கண்ணீர்த் துளிகளில் நனைந்து
கிடந்தது
உன் மணவோலை!!

(கடைசி பத்தியை இப்படியும் மாற்றிப் படிக்கலாம்)


உன்னருகில் இற‌க்கி வைத்திருந்த
வெந்நீர் பாத்திரத்தில் கையை விடப் போ......

அலறிய‌ என் அலாரத்தை நிறுத்திவிட்டு
மெல்ல மணி பார்த்தேன்.
மாலை 5.30!

இன்று எப்படியாவது
அவளிடம் சொல்லிவிட வேண்டும்
என் காதலை
எந்த பதற்றமுமின்றி!

மனதுக்குள் சொல்லிக்கொண்டு
அவசரமாய் கிள‌ம்பினேன்
அவள் கன்னங்களையொத்த‌
ஓர் ரோஜாவை ஏந்திக்கொண்டு!!

நாய்ப்பிழைப்பு

ஓடும் ரயிலை
ஓடிப் பிடித்ததில்
வசதியாய் கிடைத்து ஓர் இருக்கை.

என் அருகே, தினசரியை புரட்டியபடி
உலகப் பொருளாதாரம் முதல்
உள்ளூர் விவகாரம் வரை
அனைத்தையும் அலசிக்கொண்டிருந்தார்
என் அலுவலக நண்பரொருவர்.

"தெரியுமா?
நடனக் கலைஞரின் கையுறை ஒன்று
நாலு கோடிக்கு ஏலம் போனதாம்!
.....
.....
இங்க பாரு கொடுமைய..,
சாப்பாட்டுக்கு வழியில்லாம‌
தந்தையும்,மகளும் பட்டினிச் சாவாம்"

இரண்டையும்
எந்த வேறுபாடுமில்லாமல்
சொன்னவரிடம்,

"தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்.."
அவசர, அவசரமாய் ஞாபகத்திற்கு வந்த‌
பாரதியின் வரியை அடக்கிக் கொண்டு
அவரிடம் கேட்டேன்..,

"சார், அஞ்சு நிமிஷம் ஆபிசுக்கு லேட்டாயிட்டா
ஹாப்ப டே லீவா ஆக்கிடமாட்டாங்களே"


" கடந்த வாரம் அல்லது 15 நாள்கள் இருக்கலாம், தினசரி ஒன்றில் நான் படிக்க நேர்ந்த செய்தி தான் அது "தந்தையும், மகளும் பட்டினியால் இறந்தனர்" என்பது. ஒருவேளைப் பசியே நம்மை பாடாய்படுத்தும் போது, 'பசியால் மரணம்' என்னை அதிர்ச்சியுறச் செய்தது.வேறேதும் செய்ய இயலாத நான், அதையே சற்று கற்பனைக் கலந்து கவிதையாக்க முயன்றுள்ளேன். ."

பகுத்தறிவுவாதி

அரசு அறிவிப்பு 1:

"மின்சார வெட்டு
குறைந்தபட்சம்
நகரங்களில் 2 மணி நேரம்
கிராமங்களில் 6 மணி நேரம்"

மக்களின் சமாதானம்:
" நல்ல வேளை,
மெழுகுவர்த்தியும்
கொசுவர்த்தியும்
விலையேறவில்லை
மற்றபடி மேட்ச் தான் பார்க்க முடியாது"

அரசு அறிவிப்பு 2:
" மளிகைப் பொருள்களின்
விலை உயர்வு"

மக்களின் சமாதானம்:
"கிலோ அரிசி ரூ.1/‍ தான்"

அரசு அறிவிப்பு 3:

பெட்ரோல் விலை உயர்வு

மக்களின் சமாதானம்:

டீசல் விலை உயரவில்லை

செய்தி :
"கோடிகளில் நஷ்டம்;
வரலாறு காணாத‌ ஊழல்"

மக்களின் சமாதானம்:

"யார் தான் செய்யவில்லை"

செய்தி:
" ஓட்டுக்கு இனி காசு இல்லை"
சொன்னவனின் சட்டையைப் பிடித்து
ஓங்கிக் கேட்டான்,
இனமானத் தமிழன்
பகுத்தறிவுப் பகலவனின் வாரிசு
"ஏன்?" என்று

Tuesday, October 5, 2010

மழைக் காலம் !

ஒரு மழைக்கால
மாலைவேளையில்
மரத்தடியில் அமர்ந்திருந்தோம் நாம்!

நாமிருவரும் மௌனத்தை
அழகாய் நெய்து கொண்டிருக்கையில்,

நமக்கான வார்த்தைகளை
சத்தமாய்ப் பேசிக்கொண்டிருந்தது மழை!

தோழி !

அறிவேன் தோழி,
நான் ஒரு தீக்குச்சி சூரியன் என்று!
என்னுள் இருக்கும் வெப்பமும்
எனக்கு தெரியும்!

பற்றி எரிய எனக்கு
பாஸ்பரஸ் தேவையில்லை,
பரஸ்பரம் பேசி கொள்ள
உன் நட்பு போதும்!

மண்ணோடு மண்ணாக புதைந்துவிட்ட
ஆலமர விதை நான்!
என்க்கு நட்பு என்னும் நீரூற்றி
அக்கறை எனும் வேலி கட்டுகிறாய்.

நிச்சயம் ஒரு நாள்- நான்
விழுதுகள் இறக்கி விருட்சமாவேன்!
அப்போது இந்த உலகிற்கு சொல்வேன்
இந்த மரத்தின் வேர் - நீ என்று!!

'சிங்கம், தான் ஒரு சிங்கம் என்று
உணராதவரை ஒருபோதும்
கர்ஜிக்கமுடியாது!!'

இப்போது புரிகிறது
உனது தன்னம்பிக்கை போதனை.
இனி நான் இந்த உலகை வெல்வேன் அதை
விரைவில் உனக்கு சொல்வேன்!!

மௌன வார்த்தைகள் !

கரைகளில் அமர்ந்தபடி
பார்த்துக்கொண்டிருந்தோம்
நம் மனதின் வார்த்தைகள்
அலைகளில் பயணித்து
கடலேறிச் செல்வதை !


என் வார்த்தைகள்
ஜெயிக்க வேண்டுமென்று நீயும்
உன் வார்த்தைகள்
ஜெயிக்கவேண்டுமென்று நானும்
போட்டியின் முடிவை
படபடப்போடு
பார்த்துக்கொண்டிருந்தாலும்..,

உன் ஒரு கையால்
மணல் அள்ளி
அம்மணலிலேயே
போட்டுக்கொண்டிருந்தாய் -
கடலிலிருந்து நீர் அள்ளி
மீண்டும் அக்கடலிலேயே
கொட்டிவிடும் மழை மேகம் போல!

விடை தெரிந்திருந்தும்
சிறு குழந்தை போல
சட்டென்று நீ கேட்டாய்
'மதியத்தில் மட்டும் ஏனிந்த மணல்
இப்படி சுடுகின்றது' என்று!

நான் சொன்னேன்

'உன் பாதச்சுவடுப்படாத
தங்கள் மேல்
உன் நிழலின்
சுவடாவது படுகின்றதே
என்று அவைகள்
சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்க
நீயோ நண்பகல் வந்தால்...
அந்த கோபத்தினால் தான் சுடுகின்றது' என்று.

சற்றே முறைத்தபடி
"உங்கள..." என்று செல்லமாய்
அடிக்க வந்தாய்!

அடுத்த நொடியே
மணல் சுட ஆரம்பித்தது.

இந்த மாலை நேரத்தில்
இப்படி மணல் சுட
என் மேல் அவைகளுக்குண்டான
பொறாமையே காரணம்!!